கிளிநொச்சி பாடசாலையில் குளவிகள் கொட்டி 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
கிளிநொச்சியில் பாடசாலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் குளவிக்கூடு கலைந்து மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலாக்காகியுள்ளனர். இதனால் பாதிப்படைந்த 39 மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும் எவருக்கும் எவ்வித ஆபத்தான நிலைமை ஏற்படவில்லை என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் வரை கல்வி கற்கும் அந்தப் பாடசாலையில் காணப்பட்ட பெரிய குளவிக்கூடு ஒன்று கலைந்துள்ளது.
வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் ஆகியோர் ஏனைய மாணவர்களைப் பாதுகாப்பாக பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
ஆசியரியர்கள் சிலரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அதேவேளை, சிரேஷ்ட மாணவர் தலைவனுக்கு ஏனைய மாணவர்களை விட அதிக குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இந்தச் சம்பவத்தையடுத்து மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி றோட்ரிக்கோ மைதானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அம்புலன்ஸில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
