வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்திலான கருத்துக்களை வவுனியா வடக்குத் தவிசாளர் திரிவுபடுத்திக் கூறுகின்றார் – பிரதி அமைச்சர் உபாலி மறுப்புக் குற்றச்சாட்டு.
“வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திரிவுபடுத்தி வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். எனவே நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆளுநருக்கு நான் கோரிக்கை விடுத்துள்ளேன்.”
இவ்வாறு கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு (வெலிஓயா) பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணவேணி தாம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவால் கூட்டத்தில் வைத்து பழிவாங்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“மணலாறு அபிவிருத்திக் குழுக் கூட்டம் காலை 9.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் அந்த நேரத்தில் அங்கு சென்றிருந்தேன். கூட்டம் ஆரம்பித்து 30 நிமிடங்களின் பின்னர் பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா வடக்கின் தவிசாளர்களுக்கிடையில் விவாதம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இதன்போது மேடையின் முன் வரிசையில் அமரவேண்டும் எனத் தவிசாளர் கோரிக்கை விடுக்கின்றார் எனப் பிரதேச செயலாளர் என்னிடம் வந்து கூறினார். மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சின் விதிமுறைகளின் படி மேடையில் அமர்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அனுமதி உள்ளது. இது தொடர்பாக நான் விளக்கமளித்திருந்தேன்.
இருப்பினும் வலுக்கட்டாயமாக மேலே வந்து அவர் எனக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். நான் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கூட்டத்தை ஆரம்பித்திருந்தேன்.
இதன்போது மொழிபெயர்ப்பு தேவையா என்று அங்கிருந்த மக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டிருந்தேன். அவர்கள் தேவையில்லை என்பதால் கூட்டம் அப்படியே நடத்தப்பட்டது.
இதனையடுத்து அந்தத் தவிசாளர் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் ஒலிவாங்கி வேண்டுமா என்று கேட்டபோது அவர் கோபத்துடன் என்னிடம் இருந்து அதனை வாங்கினார். பின்னர் அவர் உரையாற்றினார்.
நெடுங்கேணியில் நடைபெற்ற கிவுல் ஓயாத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக அவர் குறிப்பிட்டார். அதற்குத் தலைமை தாங்கியமையாலேயே தன்னை நீங்கள் பழிவாங்குகின்றீர்கள் என அவர் கூறினார். தனக்கு மேடையில் இருக்க உரிமை உள்ளது. தான் ஒரு பிரதேச சபையின் தவிசாளர் என்று கூறினார். எனக்குச் சிங்களம் தெரியாது. அனைத்துக்கும் மொழிபெயர்ப்பு வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவற்றைக் கூறிக்கொண்டு அவர் அப்கிருந்து வெளியேறியிருந்தார். நீங்கள் கூறியமைக்கு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் என்ற வகையில் நான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியபோதும் அவர் அதனைக் கேட்காமல் ஆவேசத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
முதலில் கூட்டத்துக்கு வருகை தரும் அனைவரும் வருகையை உறுதிப்படுத்துவதற்காகத் தங்கள் கையொப்பத்தை இடவேண்டும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. கடந்த கூட்டத்தில் பதில் கடமையில் இருந்த பிரதேச செயலாளர் ஒருவராலேயே மேலே ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.
நான் வவுனியாவில் பிறந்தவன். தமிழ் மக்களுடன் வளந்தவன். அரசியலில் சகோதரத்துவத்துடன் வேலை செய்பவன். இது வவுனியா மக்களுக்கு நன்கு தெரியும். சம்பந்தப்பட்ட தவிசாளருடன் தனிப்பட்ட எந்தக் கோபமும் எனக்கு இல்லை.
அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றவுடன் முகநூலில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதாவது கூட்டத்தில் நடந்த சம்பவத்தைத் திரிவுபடுத்தி இனவாத ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக அவர் கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்.
மேடையில் வைத்து அவரை அவமானப்படுத்தியதாகவும், அதனை விட்டு இறங்குமாறு நான் கூறினேன் எனவும் அவர் பதிவிட்டார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு கூற்று. நடந்த சம்பவத்தைக் கூறாமல் இல்லாத ஒன்றை அவர் திரிவுபடுத்தியிருந்தார்.
இது தொடர்பாக எனது கட்சியின் ஆலோசனையின்படி ஆளுநரிடம் ஒரு முறைப்பாட்டைச் செய்திருக்கின்றேன். எனது கோரிக்கை என்னவென்றால் நான் அவரை அவமதித்துள்ளேன் அல்லது மேடையில் இருந்து இறங்கச் சொன்னேன் என்று கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அந்த இடத்தில் ஐம்பது அரச அதிகாரிகள் இருந்தனர். அவர்களுள் தமிழ் அதிகாரிகளும் அடங்குவர். பிரதேச செயலாளர் ஒரு தமிழர். கூட்டத்தில் மொத்தமாக 150 பேர் இருந்தனர். எனவே அவர்களிடம் விசாரணை நடாத்தி நான் அவரை அவமதித்தேனா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
அத்துடன், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், ஆசனங்கள் ஒதுக்கும் விதிமுறைகள் தொடர்பாகக் கிருஷ்ணவேணிக்குத் தெரியப்படுத்துமாறு ஆளுநரிடமும் நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.” – என்றார்.
