என்.பி.பியில் தனிநபர் ஆதிக்கம் இல்லை! கலந்துரையாடல்களிலேயே தீர்மானங்கள!! – புதுடில்லி பறக்க முன் ரில்வின் சில்வா தெரிவிப்பு.
“தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் என்.பி.பி. தனி நபர் ஆதிக்கம் இல்லை. உரிய வகையில் கலந்துரையாடி கூட்டுப் பொறுப்புடனேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.”
இவ்வாறு ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
நேற்று புதுடில்லிக்குச் செல்வதற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“தேசிய மக்கள் சக்தி அரசைப் பெலவத்தையில் நீங்கள் இயக்குவதாகக் கூறப்படுகின்றது. நீங்கள்தான் உத்தியோகபூர்வமற்ற ஜனாதிபதி என்ற விமர்சனமும் எதிரணியால் முன்வைக்கப்படுகின்றதே…” என்று ரில்வின் சில்வாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர் கூறியவை வருமாறு:-
“நான் உத்தியோகபூர்வமற்ற ஜனாதிபதி அல்லன். நான் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் மட்டுமே.
நான் எவருக்கும் அழுத்தம் பிரயோகிப்பது கிடையாது. அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது இல்லை.
ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் தலைமையகம் பெலவத்தையில்தான் உள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு முன்னரும் நாம் அங்கிருந்துதான் முடிவுகளை எடுப்போம். தற்போதும் அங்கிருந்து கலந்துரையாடுவோம்.
அமைச்சரவையில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் உரிய இடத்தில் எடுக்கப்படும். எமது கட்சித் தலைமையகத்தில் கருத்தாடல் இடம்பெறும்.
பல யோசனைகள் வரும், அது பற்றி ஆராயப்பட்டுப் பெரும்பாலானோரின் தேர்வு ஏற்கப்படும்.
எனவே, பெலவத்தையில் கலந்துரையாடல் இடம்பெறும். ஆனால் பெலவத்தையில் இருந்து கொண்டு ஒருவர் இயக்குகின்றார் எனக் கூறப்படுவது தவறு.
ஏனைய கட்சிகளைப் போல் தனிநபர் செல்வாக்கு செலுத்தும் கட்சி அல்ல எமது கட்சி. நாம் என்ற சிந்தனை அடிப்படையிலேயே செயற்படுகின்றோம். எம்மிடையே கூட்டுப் பொறுப்பு உள்ளது.
தனிநபர் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளுக்கு எமது அரசியல் கலாசாரத்தைப் புரிந்துகொள்வது கடினம்.” – என்றார்.
