யாழ். போதனா வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் வெடிபொருள்கள்.
யாழ். நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ். போதனா வைத்தியசாலையின் பின்புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணியை நேற்று ஞாயிற்றுக்கிழமை துப்பரவு செய்த வேளை, துப்பரவுப் பணியாளர்கள் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்றை அவதானித்தனர்.
அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பொதி தொடர்பில் சோதனையிட்டனர்.
அதனுள் கைக்குண்டு, கலிபர் ரக துப்பாக்கி தோட்டாக்கள் காணப்பட்டன.
பொதியினுள் உள்ள வெடிபொருள்கள் தொடர்பில் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும், அதன் பின்னரே மீட்கப்பட்ட வெடிபொருள்கள் தொடர்பான தகவல்களை வெளியிட முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
