யாழ். அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூடு: உயர்மட்ட விசாரணை ஆரம்பம்! – அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவிப்பு.

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில், அல்லைப்பிட்டி சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்றை நிறுத்துமாறு கட்டளையிட்டுள்ளனர். எனினும், அவ்வாகனம் பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்ததால் துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் விளக்குகையில்,

“வாகனத்தை நோக்கி நேரடியாகத் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னதாக, வானத்தை நோக்கிப் பலமுறை எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. அந்த எச்சரிக்கையையும் மீறி வாகனம் பயணித்ததாலேயே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸாரும், யாழ். மாவட்டக் குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இந்தச் சம்பவத்தில் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் (17 வயது) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சித்தி இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “குடும்பக் கஷ்டம் காரணமாகவே எனது பெறாமகன் சிறு வயதிலேயே வேலைக்குச் சென்றார். சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத போதிலும் அவர் வாகனம் ஓட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை ஆட்களை வேலைக்கு ஏற்றுவதற்காகச் சென்றபோதே இந்த அநியாயம் நடந்துள்ளது.” – என்று கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றமைக்காக 17 வயதுச் சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.