ராஜபக்க்ஷக்கள் தலைமையில் பிரம்மாண்டக் கூட்டணியாம் – தேர்தலைச் சந்திக்க மொட்டுக் கட்சி தயாராம்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தில் மிக விரைவில் பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்படும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக, கடந்த 75 ஆண்டுகால அரசியலைச் சாபம் என்று விமர்சித்தது. ஆனால், இன்று ஜனாதிபதி அதே 75 ஆண்டுகால அரசியல் செயலொழுங்கையே பின்பற்றிச் செல்கின்றார். எம் மீதும் ராஜபக்ஷக்கள் மீதும் கடந்த காலங்களில் அடுக்கடுக்கான போலிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றை இன்று சட்டத்தின் முன் நிரூபிக்க முடியாமல் அரசு திணறுகின்றது.” – என்றார்.

சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் கூறுவதைச் சுட்டிக்காட்டிய சஞ்ஜீவ எதிரிமான்ன, “விசாரணைகளை அமைச்சரவையா முன்னெடுக்கின்றது?” எனக் கேள்வி எழுப்பினார்.

“எம் மீது வீண்பழி சுமத்துவதை விடுத்து, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.” – என்றும் அவர் அரசை வலியுறுத்தினார்.

தற்போது கட்சி என்ற அடிப்படையில் தாம் பலமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் இணக்கமாகச் செயற்பட்டு வருவதாகவும், விரைவில் அமையவுள்ள புதிய கூட்டணியின் ஊடாகவே எதிர்வரும் தேசிய தேர்தல்களை எதிர்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்தார்.

மேலும், நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் தேர்தலை நடத்துமாறும் அவர் அரசுக்குச் சவால் விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.