வாக்குறுதிகள் காற்றில்; அடக்குமுறை ஆட்சியில்! – ‘திசைகாட்டி’ அரசைச் சாடும் ‘மொட்டு’.

தேசிய மக்கள் சக்தி அரசு, ஆட்சிக்கு வரும்போது வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகச் செயற்படுவதோடு, மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டங்களை அடக்குமுறை மூலம் ஒடுக்கி வருகின்றது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜானக வக்கும்புர குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்கள் தமது கோரிக்கைகளை வென்றெடுக்க வீதியில் இறங்கிப் போராடத் தேவையில்லை எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, இன்று மக்களை ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக வந்து போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தற்போதைய அரசின் சர்வாதிகாரப் போக்கினால் முடக்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், போராட்டங்களை முன்னெடுப்பதற்கெனத் தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அன்று போராட்டக்காரர்கள் பல மாதங்களாக அங்கேயே தங்கியிருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இன்று மழையில் நனையும் போராட்டக்காரர்களுக்குக் கூடத் தங்குவதற்கு இடமளிக்கப் பொலிஸார் மறுப்பது அரசின் மனிதாபிமானமற்ற போக்கையே காட்டுகின்றது.” – என்றார்.

எதிர்க்கட்சியினர் மீது வீண் பழிகளைப் சுமத்தித் தப்பிக்க முயல வேண்டாம் என அரசுக்கு அறிவுறுத்திய அவர், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முன்வருமாறும் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.