விசாரணைக்காக சபாநாயகர் பதவி விலகத் தேவையில்லை – ஆளுங்கட்சி திட்டவட்டம்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தனது பதவியிலிருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வசதியாக அவரைப் பதவியிலிருந்து விலகுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது குறித்து ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழு ஏதேனும் தீர்மானம் எடுத்துள்ளதா என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேறு எவராவது, அத்தகைய விசாரணைகளுக்காகத் தமது பதவிகளைத் துறந்துள்ளனரா? அவ்வாறான நடைமுறை எதுவும் இதற்கு முன்னர் பின்பற்றப்படவில்லை.” – என்றார்.

சபாநாயகர் பதவியில் நீடிப்பது விசாரணைகளுக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாது என்று வலியுறுத்திய அவர், ஆணைக்குழு தனது விசாரணைகளை எவ்வித இடையூறுமின்றி சுயாதீனமாகவும் தாராளமாகவும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.