கிளிநொச்சி வீதி அபிவிருத்திப் பணிகள் விரைவுபடுத்தல்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விசேட கூட்டம்.

கிளிநொச்சி நகரப் பகுதியிலுள்ள நான்கு வழிப்பாதையை மேலும் விஸ்தரிப்பது குறித்தும், வீதி விபத்துக்களைக் குறைக்கும் வகையில் வீதிச் சமிஞ்சை விளக்குகளைப் பொருத்துவது குறித்தும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நேற்று புதன்கிழமை மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலர் சு.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:-

கிளிநொச்சி நகரப் பகுதியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், மேம்படுத்தவும் 4 வழிப்பாதையைத் தேவையான இடங்களுக்கு விஸ்தரிப்பது தொடர்பிலும், பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யப் பாலங்கள் மற்றும் வீதிச் சமிஞ்சை விளக்குகளை அமைப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு உட்பட்ட வீதிகள், பாலங்கள் மற்றும் பிரதேச சபைகளுக்குச் சொந்தமான கிராமிய வீதிகளின் தற்போதைய நிலை குறித்தும், அவற்றை முன்னுரிமை அடிப்படையில் புனரமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையால் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்களில் நிலவும் தாமதங்கள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இத்திட்டங்களை விரைவுபடுத்துவதற்குத் தடையாக உள்ள காரணிகள் குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சின் மேலதிக செயலாளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வீதி அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தித் திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.