அரசுக்கு எதிராக அணிதிரளுங்கள்! – விமல் பகிரங்க அழைப்பு.

“இலங்கையின் முழு கனிம வளங்களையும் ஆராய்தல், பகுப்பாய்தல், வெட்டியெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியவற்றை இந்திய மாநில நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் திருகோணமலைத் துறைமுகம் ஆகிய துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசு முயற்சிக்கின்றது. அரசின் இந்திய மயமாக்கலுக்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச அழைப்பு விடுத்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையின் மேற்பரப்பு மற்றும் கடல் தளத்திலுள்ள அரிய கனிம வளங்களை வரைபடமாக்குதல், அடையாளம் காணுதல் மற்றும் வெட்டியெடுப்பதை இந்திய நிறுவனங்களுக்கு ஒப்படைக்க இந்த ஒப்பந்தம் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இரு அரசுகளின் ஒப்பந்தத்துடன் இந்திய நிறுவனங்களுக்கு கனிமமயமாக்கப்பட்ட பகுதிகளை ஒதுக்கவும், இந்திய பொது மற்றும் தனியார் துறைகளின் முதலீடுகளை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது.

சிலோன் கிராஃபைட், நீல சபையர், புல்முடே கனிம மணல் (இல்மனைட்,ரூட்டைல், சிர்கான், மோனாசைட்), உயர் தர சிலிக்கா, ராக் பாஸ்பேட், டோலமைட் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள கோபால்ட் படிவுகள் போன்ற வளங்களை இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா கையகப்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த வளங்கள் தொழில்நுட்பத் தொழில்களுக்கு அவசியமானவை. இந்த முடிவு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது.

இந்தத் திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் இந்த ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கையில் இந்திய மயமாக்கலுக்கு எதிராகப் போராடிய ஒரு கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் காணப்பட்டது. இந்த நடவடிக்கை துரோகமானது, மக்கள் ஒன்றுபட்டு அதற்கு எதிராகப் போராட வேண்டும்.

காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இந்தியமயமாக்கும் முடிவுகள் மற்றும் மருந்து சந்தையை இந்திய மருந்துகளால் நிரப்ப ஏழு இரகசிய ஒப்பந்தங்கள் போன்ற இந்தியா தொடர்பான பிற திட்டங்களையும் அரசு முன்னெடுத்துள்ளது. அரசின் இந்தச் செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.