அரகலயவின் பின்னணியில் உள்ள சக்திகள் யார்? எமது ஆட்சியில் ஆணைக்குழு மூலம் விசாரணை – இப்படி நாமல் எம்.பி. உறுதி .

அரகலய’ போராட்டத்தின் பின்னணி மற்றும் அதற்காக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற நிதி தொடர்பில், எதிர்காலத்தில் அமையவுள்ள எமது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

“தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டு மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று தாமே பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் இத்தகைய முறைகேடுகள் குறித்து நாம் கேள்வி எழுப்புவதாலேயே, எமக்கு எதிராகப் பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

தமது குறுகிய அரசியல் நலன்களுக்காக இளைஞர்களின் வாழ்க்கையைப் பணயம் வைக்கும் தந்திரோபாயத்தை ஜே.வி.பி. 1988ஆம் ஆண்டிலிருந்தே கடைப்பிடித்து வருகின்றது. இவர்களது இத்தகைய செயற்பாடுகளால் கடந்த காலங்களில் பல இளைஞர்கள் உயிரை இழந்துள்ளனர். கடந்த ‘அரகலய’ போராட்டத்தின் போதும் இதையே நாம் கண்டோம்.

அரகலய போராட்டம் எவ்வாறு திட்டமிடப்பட்டது? அதன் பின்னணியில் இருந்த சக்திகள் யார்? குறிப்பாக, அந்தப் போராட்டத்துக்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பெருமளவிலான பணம் மற்றும் அதன் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து எமது ஆட்சியில் முறையான விசாரணை நடத்தப்படும். இதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு உண்மைகள் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.