புதுடில்லியில் அநுரவுக்கு அமோக வரவேற்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லியைச் சென்றடைந்தார்.

நேற்று மாலை புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ஜனாதிபதியை, இந்திய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சௌதரி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேரில் சென்று உற்சாகமாக வரவேற்றனர்.

மனிதகுலத்தின் நன்மைக்காகச் செயற்கை நுண்ணறிவை (AI) எவ்வாறு பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய்வதே இந்த ‘AI Impact Summit 2026’ மாநாட்டின் பிரதான நோக்கமாகும். புதுடில்லியில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (வியாழக்கிழமை) விசேட உரையாற்றவுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புகள் குறித்து அவர் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில், டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசுரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மாற்றங்கள் மற்றும் சர்வதேசத் தொழில்நுட்பக் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதில் இந்த விஜயம் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.