சஜித் – நாமலை இணைக்கும் பாலமாகிறாரா ஜி.எல். பீரிஸ்? – தெற்கு அரசியல் களத்தில் புதிய திருப்பம்.

மக்கள் குரல் அமைப்பின் தலைவர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று புதன்கிழமை பத்தரமுல்லையிலுள்ள ‘நெலும் மாவத்தை’ கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, பொதுச்செயலாளர் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.பி. ரத்நாயக்க மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

மக்கள் குரல் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர, பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் டிரான் அலஸ் உட்பட பல தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் ஒருங்கிணைப்பில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் பீரிஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 21ஆம் திகதி நுகேகொடையில் ‘மகா மக்கள் குரல்’ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட பிரம்மாண்ட பேரணியைத் தொடர்ந்து, தற்போது கட்சித் தலைமையகத்தில் இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளமை அரசியல் களத்தில் விசேட கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.