மினுவாங்கொடை, மஹியங்கனையில் மின்சாரம் தாக்கி இருவர் பரிதாபப் பலி!
நாட்டின் இரு வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவரும், குடும்பஸ்தர் ஒருவரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொடையில்
இளைஞர் உயிரிழப்பு
கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடைப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மின்சார விபத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீரிகமை பகுதியைச் சேர்ந்த மேற்படி இளைஞர், வீடொன்றில் மின்குமிழ்களைப் பொருத்திக் கொண்டிருந்த போதே எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மஹியங்கனையில்
குடும்பஸ்தர் மரணம்
இதேவேளை, பதுளை மாவட்டம், மஹியங்கனைப் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் மின்சாரம் தாக்கி 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த மேற்படி குடும்பஸ்தர், காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியமே இந்த மரணத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் கைது
இந்தச் சட்டவிரோத மின்சார இணைப்பை ஏற்படுத்தினார் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் அந்தந்தப் பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
