ஒரே நாளில் இருவர் யானைகள் தாக்கி பரிதாபச் சாவு!
இலங்கையின் பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற இரு வேறு காட்டு யானை தாக்குதல் சம்பவங்களில் இளைஞர் ஒருவரும், முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
யானை – மனித மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரே நாளில் இரு உயிர்கள் பறிபோயுள்ளமை அந்தந்தப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெதிரிகிரியவில்
இளம் விவசாயி பலி
பொலன்னறுவை, மெதிரிகிரிய பிரதேசத்தில் தனது வயல் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே 25 வயதுடைய இளம் விவசாயி காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதலின் வீரியம் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மெதிரிகிரிய தெற்குப் பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞரின் திடீர் மரணம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பானம ஏரிக்கு அருகில்
முதியவர் மரணம்
இதேவேளை, அம்பாறை – பானம பகுதியில் உள்ள ஏரிக்கு நீராடுவதற்காகச் சென்ற 71 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
நீராடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது புதருக்குள் மறைந்திருந்த யானை திடீரென அவரைத் தாக்கியுள்ளது.
பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவர், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பானம தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
