மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து காருடன் மோதியதில் இளைஞர் ஒருவர் மரணம்!
காலி – ஹினிதும பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தவலம – அக்குரஸ்ஸ வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை, அக்குரஸ்ஸ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, தவலம சந்தி பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்துள்ளது. அதேவேளை, எதிர்த்திசையில் வந்த காருடன் குறித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் அமர்ந்து பயணித்த மற்றொருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஹினிதும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சைப் பலனின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் காலி – தலங்கல்ல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஹினிதும பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
