போதைப்பொருள் வேட்டை: ஒரே நாளில் 823 பேர் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 823 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 11 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைக்கமைய 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 826 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 11 பேர் புணர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருள்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 246 கிராம் ஹெரோயின், 385 கிராம் ஐஸ், 7 கிலோகிராம் 759 கிராம் கஞ்சா, 15 ஆயிரத்து 639 கஞ்சா செடிகள், 17 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 506 போதை மாத்திரைகள், 14 கிலோகிராம் 164 கிராம் 960 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 3 கிலோகிராம் 18 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.