அம்பாறையில் கோர விபத்து மின் கம்பத்துடன் மோதி இராணுவச் சிப்பாய் பலி!
அம்பாறை – உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமன பெத்த பகுதியில், மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி உயர் மின்னழுத்த மின்கம்பத்துடன் மோதியதில் இளம் இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை 1:15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மற்றுமொரு வாகனத்தின் மூலம் அம்பாறை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திரவியல் பட்டாலியனைச் சேர்ந்த 22 வயதுடைய ஆர்.எச். உதிக மலிந்த ரணசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணியாற்றி வந்தவராவார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, விடுமுறையில் பொலன்னறுவைக்குச் சென்றிருந்த மேற்படி இராணுவச் சிப்பாய், பின்னர் மஹியங்கனையில் உள்ள தனது பாட்டியைப் பார்த்துவிட்டு, அம்பாறை – பொல்வத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பேரில், உஹன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
