பிரிவினைவாதிகளைத் திருப்திப்படுத்தவே சுரேஷ் சலேயைக் கைது செய்த அநுர அரசு! – மொட்டுவின் முன்னாள் எம்.பி. சம்பத் அத்துகோரல காட்டம்.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது நடவடிக்கை, பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்று என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசுக்கு, 16 மாதங்கள் கடந்தும் அதனைச் செய்ய முடியாமல் போயுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார். ஆனால், அதனைச் செய்யத் தவறியதால், தற்போது ஏப்ரல் மாதம் நெருங்கும் வேளையில் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே சுரேஷ் சலேயைக் கைது செய்துள்ளனர்.
இந்தக் கைதின் மூலம் ஜனாதிபதி பிரிவினைவாதிகளையும், கத்தோலிக்க மக்களையும் திருப்திப்படுத்த முயல்கின்றார். குறிப்பாக, யாழ்ப்பாணத்துக்குச் சென்றபோதும் பிரிவினைவாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே அவர் செயற்பட்டிருந்தார்.
அதேபோன்று, தற்போது நிலக்கரி மோசடி தொடர்பாக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்கும், ராஜபக்ஷ அரசுக்கு ஆதரவாக மக்கள் மீண்டும் அணிதிரள்வதைத் தடுப்பதற்குமே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழக்குப் பதிவு செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்ட ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரைப் பயன்படுத்தியே இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா ஜஸ்மின் தப்பிச் சென்றபோது, கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதியாக இருந்தவர் தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர ஆவார். இவர்களையும், தேசியப் பட்டியல் உறுப்பினர் இப்ராஹிமின் மகன்களையும் வைத்துக்கொண்டே இந்த நாடகத்தை அநுர அரச தரப்பினர் அரங்கேற்றுகின்றனர்.
எந்தவொரு நாட்டுத் தலைவரும் தனது நாட்டின் புலனாய்வுத் துறையைப் பலவீனப்படுத்த முயற்சிப்பதில்லை. ஆனால், இந்த அரசு பிரிவினைவாதிகளைத் திருப்திப்படுத்தத் தனது நாட்டின் புலனாய்வுத் துறையையே காட்டிக்கொடுத்துள்ளது. இது யுத்தத்தை வெற்றிகொள்ள உயிர்த்தியாகம் செய்தவர்களின் உறவினர்களைப் புண்படுத்தும் செயலாகும்.” – என்றார்.
