சுரேஷ் சலே கைது ‘சுனாமி’யாக மாறும்! – அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. எச்சரிக்கை.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனவும், அவரைக் கைது செய்துள்ளதன் மூலம் பாதுகாப்புத் துறைகள் அனைத்தும் வீழ்ச்சியடையும் அபாயம் இருக்கின்றது எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்:-

“ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மிகவும் நேர்மையான மற்றும் திறமையான ஓர் அதிகாரி ஆவார். அத்தகைய ஒருவரைத் திடீரெனக் கைது செய்து, அதன் மூலம் அரசு அரசியல் ரீதியான நற்பெயரைப் பெற முயற்சிப்பது அநீதியான செயலாகும். இந்த நடவடிக்கையானது பொலிஸ், இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் மன தைரியத்தைப் பாரியளவில் வீழ்ச்சியடையச் செய்யும்.

சலேயைக் கைது செய்வதன் மூலம் அரசு தப்பித்துக்கொள்ளலாம் என நினைக்கக் கூடாது. அவர் தவறு செய்திருந்தால் அது குறித்து விசாரணை நடத்தித் தண்டனை வழங்குவது வேறு விடயம். ஆனால், அவரை முடிந்தவரை விரைவாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில், புலனாய்வுத் துறையில் ஏற்படக்கூடிய வீழ்ச்சி அரசுக்கே பாதிப்பாக அமையும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டன என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். இச்சம்பவத்துடன் தொடர்புடைய பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தண்டனை மற்றும் அபராதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இன்னும் எவராவது எஞ்சியிருப்பின் அவர்களைக் கண்டுபிடிப்பதில் எமக்குத் தடையேதுமில்லை.

அதேவேளை, கர்தினால் ஆண்டகை இவ்விடயத்தில் மிகுந்த அதிருப்தியில் இருப்பதால், அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுவது நல்லது. ஆனால், சுரேஷ் சலே விவகாரத்தில் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இது மீண்டும் அரசைச் சுற்றியடிக்கும் ஒரு ‘சுனாமி’யாக அமைந்துவிடும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.