ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூடு: பெண் உட்பட இருவர் கைது! – 7 நாள் தடுப்புக்காவலில் விசாரணை.

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர், போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போதே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கடவத்தை – சூரியபாலுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெஹெரகொடெல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வெல்லம்பிட்டிய – வெஹெரகொடெல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை ஆயுதத்துடன் தனது ஓட்டோவில் அழைத்துச் சென்ற சாரதி எனத் தெரியவந்துள்ளது. பெண் சந்தேகநபர் அவருக்கு உதவியாளராகச் செயற்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது ஆண் சந்தேகநபரிடமிருந்து 6 கிராம் 540 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், பெண் சந்தேகநபரிடமிருந்து 3 கிராம் 100 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரையும் 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.