யாழில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு கிடையாது! – வதந்திகளை நம்ப வேண்டாம் என அரச அதிபர் அறிவிப்பு.
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குத் தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற பீதியடைய வேண்டாம் என மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.
செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்குவதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சிய முனையமானது வழமைபோல் இன்று ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருக்கும். இதனால், மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிலையங்களுக்கும் நாளை திங்கட்கிழமை முதல் வழமை போன்று பெற்றோல் விநியோகிக்கப்படும்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் நேற்று நான் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு கலந்துரையாடினேன். இதன்போது, நாட்டுக்குத் தேவையான ஒரு மாதத்திற்கும் அதிகமான காலத்திற்குப் போதுமான பெற்றோல் கையிருப்பில் இருப்பதாக அவர் என்னிடம் உறுதிப்படத் தெரிவித்தார்.
எனவே, பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து நிலவும் வதந்திகளை நம்பித் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமிக்க முற்பட வேண்டாம். யாழ். மாவட்டத்திற்குத் தேவையான எரிபொருள் விநியோகம் சீராக முன்னெடுக்கப்படும்.” – என்றார்.
