மனைவியைக் கழுத்தறுத்து படுகொலை செய்த கணவன் – மாரவிலவில் நள்ளிரவு கொடூரம்.

புத்தளம், மாரவில, கட்டுநேரிய பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவனைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மாரவில, கட்டுநேரிய – பேன்கட பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கோரச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்று நள்ளிரவு 11.40 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்துக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து, மாரவில பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பொலிஸார் வீட்டைச் சோதனையிட்டபோது, அந்தப் பெண் தனது படுக்கையறையிலேயே இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

சந்தேகநபரான கணவன், தனது மனைவியின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பத் தகராறு எல்லை மீறியதே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது நீதிவான் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைக் கண்டறியவும், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைப் பிடிக்கவும் மாரவில பொலிஸார் விசேட குழுக்களை அமைத்து விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.