இலங்கை கடற்பரப்பில் அதிகாலை ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிப்பு – 101 பேர் மாயம் – 78 பேர் காயம் * 32 பேர் மீட்கப்பட்டு காலி வைத்தியசாலையில் அனுமதி.
இலங்கையின் தென் கடற்பரப்பில் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 25 மைல் தொலைவில், ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா’ எனும் போர்க்கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கியுள்ளத் என்று பாதுகாப்புத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 180 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் பயணித்த இந்த ‘மௌஜ்’ ரக போர்க்கப்பல், இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. இது ஒரு வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலினால் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலில் இருந்தவர்களில் 101 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இச்சம்பவத்தில் 78 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட 32 மாலுமிகள் மேலதிக சிகிச்சைக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடற்படையின் 2 கப்பல்கள் மற்றும் விமானப்படையின் ஒரு விமானம் தற்போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தின் ஒரு பகுதியாகவே இத்தாக்குதல் பார்க்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
பாதிக்கப்பட்ட மாலுமிகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
சர்வதேச கடல்சார் ஒப்பந்தங்களின்படி, மனிதாபிமான அடிப்படையிலேயே இந்த மீட்புப் பணிகளை இலங்கை முன்னெடுத்து வருகின்றது என்று கடற்படைப் பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் இலங்கையின் தேசியப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகின்றது.
