நயினாதீவில் பயங்கரம் பூசகர்களுக்கிடையே வாள்வெட்டு! ஒருவர் கொடூரமாகப் படுகொலை!! – மற்றைய பூசகர் கைது.

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சேர்ந்த இரு பூசகர்கள் நயினாதீவில் உள்ள பிள்ளையார் ஆலயம் மற்றும் அம்மன் ஆலயம் ஆகியவற்றில் பூசகர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பத் தகராறு நேற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

35 வயதான மற்றைய பூசகர், நயினாதீவில் வசித்து வரும் முருகன் கிருஷ்ணகுமார் (வயது 43) என்பவரின் வீட்டுக்குச் சென்று அவருடன் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, மறைத்து வைத்திருந்த வாளினால் கிருஷ்ணகுமாரை சரமாரியாக வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஊர்காவற்றுறைப் பொலிஸார் உடனடியாக நயினாதீவுக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை மீட்ட பொலிஸார், அதனை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திய 35 வயதான பூசகரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புனித பூமியாகக் கருதப்படும் நயினாதீவில் இடம்பெற்ற இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.