24 கோடி ரூபா சொத்துக் குவிப்பு விவகாரம்: சஜின் வாஸ் குணவர்தனவுக்கு மார்ச் 24 வரை விளக்கமறியல்!
சுமார் 24 கோடி 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களைச் சட்டவிரோதமான முறையில் ஈட்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட அவர், இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சஜின் வாஸ் குணவர்தன மக்கள் பிரதிநிதியாக இருந்த காலப்பகுதியில், தனது வருமானத்துக்குப் புறம்பாக 243 மில்லியன் (24.3 கோடி) ரூபாவுக்கும் அதிக சொத்துக்களைச் சேர்த்தார் என்று இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான நீண்டகால விசாரணைகளின் அடிப்படையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபருக்கு எதிரான விசாரணைகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை எனவும், அவர் ஈட்டியதாகக் கூறப்படும் சொத்துக்களின் மூலம் மற்றும் பரிமாற்றங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது எனவும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று நீதிமன்றில் தெரிவித்தனர்.
இரு தரப்பு சட்டத்தரணிகளினதும் நீண்ட வாதங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் அஸங்க எஸ். போதரகம, விசாரணைகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்க மறுப்புத் தெரிவித்தார்.
இதன்படி, சஜின் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அன்று இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
