தொழில் போட்டி வன்முறையில் முடிந்தது கொடிகாமத்தில் பஸ் எரிப்பு! இரு சந்தேகநபர்கள் கைது!!
யாழ். கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை தனியார் பஸ் ஒன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, அதில் நேரடியாகத் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரைக் கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனியார் பஸ் சேவையில் ஈடுபடும் இரு தரப்பினருக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தொழில்சார் முரண்பாடே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு இந்தப் பஸ்ஸுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தத் தீவைப்புச் சம்பவத்தில் பஸ்ஸின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, துரிதமாகச் செயற்பட்ட கொடிகாமம் பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் தனியார் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுவோரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





