கடலில் பலியான ஈரான் மாலுமிகளின் சடலங்களை தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.
காலி போதனா வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிர்பதன அறைகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதிவான் சமீர தொடங்கொட இன்று உத்தரவிட்டார்.
காலி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலி துறைமுக பொலிஸார் இது தொடர்பாக காலி பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் முன்வைத்த விசேட கோரிக்கையைப் பரிசீலித்த பின்னரே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இலங்கைக்கு அப்பால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்த இந்த மாலுமிகளின் உடல்கள், சட்ட ரீதியான நடைமுறைகளுக்காக கடந்த சில நாள்களாக காலி போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், இந்த உடல்கள் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
