பொதுப் போக்குவரத்தில் புதிய தேசிய கொள்கை – நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரை.

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக புதிய தேசியக் கொள்கையொன்றை அரசு தற்போது தயாரித்து வருகின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 199 சாரதிகள் மற்றும் 342 நடத்துநர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“தற்போதுள்ள பழைய பஸ்களைப் படிப்படியாக அகற்றிவிட்டு, தரமான புதிய பஸ்களைச் சேவையில் இணைப்பதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. இதனை ஒரே நாளில் செய்துவிட முடியாது என்றாலும், அடுத்த சில ஆண்டுகளில் திட்டமிட்ட வகையில் இதனைச் செயல்படுத்துவதன் மூலம் தரமான பஸ் சேவையை உறுதிப்படுத்த முடியும். இதன் முதற்கட்டமாக ஜப்பான் அரசிடமிருந்து இந்த மாதம் 8 புதிய பஸ்கள் கிடைக்கவுள்ளன. அத்துடன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மேலும் புதிய பஸ்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

பொதுப் போக்குவரத்துச் சேவையில் நிலவும் நம்பிக்கையற்ற தன்மை காரணமாகவே மக்கள் தமது வருமானத்தில் பெரும் பகுதியைச் செலவிட்டு மோட்டார் சைக்கிள்களையும் கார்களையும் வாங்குகின்றனர். வலுவான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் இந்தச் சுமையைக் குறைக்க முடியும். இது வாகன இறக்குமதிக்கான அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதுடன், நகர்ப்புற போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசடைவுக்கும் தீர்வாக அமையும்.

சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் நடத்தை ஒரு நிறுவனத்தின் நற்பெயரைத் தீர்மானிக்கின்றது. போதைப்பொருள் பாவனையாளர்கள் எவருக்கும் வாகனங்களைச் செலுத்த இடமளிக்க முடியாது. மக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களின் கைகளிலேயே உள்ளது. எனவே, இ.போ.சபைக்குள் புதியதொரு கலாசாரத்தை உருவாக்குவதற்குப் புதிய நியமனங்களைப் பெற்ற நீங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

தனியார் பஸ் சேவையை வெறும் இலாபம் ஈட்டும் தொழிலாக மட்டும் பார்க்காமல், அதனையும் ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவர அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதற்காக வலய ரீதியிலான பஸ் நிறுவனங்களை உருவாக்கி, அதில் தனியார் பஸ் உரிமையாளர்களை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், நட்டத்தில் இயங்கும் கிராமப்புற வீதிகளின் போக்குவரத்துச் சேவையைப் பராமரிக்க இந்த வரவு செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

இந்நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.