அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! – பிலியந்தலையில் பயங்கர விபத்து.

பிலியந்தலை – கொரகபிட்டிய பகுதியில் அமைந்துள்ள தனியார் அச்சு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தெனியாய, பல்லேகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மிலிந்த மதுசங்க விஜேசிங்க என்ற திருமணமான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவரின் மனைவியும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:-

நேற்று (11), உயிரிழந்த இளைஞர் மற்றொரு ஊழியருடன் இணைந்து இயந்திரத்தின் தினசரிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதன்போது இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு ஒன்றைச் சரிபார்ப்பதற்காக மற்றைய ஊழியர் ஒருபுறமாக இயந்திரத்துக்குள் தலையை நுழைத்துள்ளார். அதேநேரம் மிலிந்தவும் இயந்திரத்தின் மறுபுறமாகத் தலையை நுழைத்துச் சரிபார்க்க முயன்றுள்ளார்.

அவ்வேளையில், அச்சு இயந்திரம் எதிர்பாராத விதமாகத் தானாகவே இயங்கத் தொடங்கியுள்ளது. இதில் மிலிந்தவின் தலை இயந்திரத்தினுள் சிக்கிப் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ஏனைய ஊழியர்கள் மீட்டு உடனடியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சிந்தக உதய குமார சம்பவ இடத்துக்கு வருகை தந்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (12) ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.