மாங்குளம் – மூன்றுமுறிப்பு வீதி கட்டம் கட்டமாக அபிவிருத்தி! – ஆளுநர் வேதநாயகன் உறுதி.

மாங்குளம் – மூன்றுமுறிப்பு பிரதான வீதியைக் கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பாலைப்பாணி மற்றும் கொம்புவைச்சகுளம் ஆகிய பின்தங்கிய கிராமங்களுக்கு நேற்று வியாழக்கிழமை ஆளுநர் நேரில் களப் பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரனும் ஆளுநருடன் இணைந்திருந்தார்.

பாலைப்பாணி மற்றும் கொம்புவைச்சகுளம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை நேரில் சந்தித்து ஆளுநர் கலந்துரையாடினார்.

இதன்போது தமது நீண்டகாலப் பிரச்சினைகளை மக்கள் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். பல ஆண்டுகளாக அடிப்படை வசதியான வீதிப் போக்குவரத்துச் சீரமைக்கப்படாமையால், குறித்த இரண்டு கிராமங்களையும் சேர்ந்த பல குடும்பங்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டனர்.

மேலும், மாங்குளத்துக்கும் மூன்றுமுறிப்புக்கும் இடைப்பட்ட வனப்பகுதியை அண்டிய பிரதேசங்களில் தாம் வாழ்ந்து வருவதால், யானைகளின் நடமாட்டம் காரணமாக அவசர தேவைகளுக்காகக் கூட இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடியாத அபாய நிலை காணப்படுவதாகத் தெரிவித்தனர்.

வீதி மிக மோசமாகச் சிதைவடைந்துள்ளதால், அவசர மருத்துவத் தேவைகளுக்காக நோயாளிகளை உரிய நேரத்துக்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.

எனவே, மாங்குளம் – மூன்றுமுறிப்பு வீதியைப் புனரமைத்துத் தருமாறும், யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த யானை வேலி அமைத்துத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அத்துடன், பற்றைக்காடுகள் வளர்ந்து பயணிக்க முடியாதவாறுள்ள கிடாப்பிடிச்சகுளம் – கொம்புவைச்சகுளம் வீதியைத் துப்புரவு செய்து தருமாறும் கொம்புவைச்சகுளம் மக்கள் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.

மக்களின் இக்கோரிக்கைகளைச் செவிமடுத்த ஆளுநர், சுமார் 18 கிலோமீற்றர் நீளமான மாங்குளம் – மூன்றுமுறிப்பு பிரதான வீதியைக் கட்டம் கட்டமாகப் புனரமைத்து மக்களின் பயன்பாட்டுக்குக் கையளிக்க உரிய நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என உறுதியளித்தார். அத்துடன், மக்களின் உடனடிப் பயன்பாட்டுக்காகக் கிடாப்பிடிச்சகுளம் – கொம்புவைச்சகுளம் வீதியிலுள்ள பற்றைகளைத் துப்புரவு செய்வதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.