சுரேஷ் சலே தொடர்பில் போலியான கதைகள்! – ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைச் சாடும் நாமல்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், அரசியல் எதிர்ப்புகளை இலக்காகக் கொண்டோ அல்லது புவிசார் அரசியல் தேவைகளுக்காகவோ முன்னெடுக்கப்படக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான தற்போதைய விசாரணைகளின் முன்னேற்றத்தைப் பார்க்கும் போது, அதன் நம்பகத்தன்மை பேணப்படுமா என்ற பாரிய கேள்வி எழுகின்றது. சுரேஷ் சலேவை இத்தாக்குதலுடன் தொடர்புபடுத்தி, திட்டமிடப்பட்ட அரசியல் அர்த்தங்கள் மூலம் போலியான கதைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், தாக்குதல் இடம்பெற்ற போது தமது கடமைகளைச் செய்யத் தவறியவர்கள் தொடர்பாக எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதாகக் கூறிக்கொண்டே தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால், தற்போதைய விசாரணைகள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. நியாயமான, வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற எந்தவொரு விசாரணைக்கும் நாம் ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை; அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்.

இந்தக் கொடூரமான தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குச் சட்டப்படி தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.