84 மாலுமிகளின் சடலங்களுடன் ஈரான் புறப்பட்ட விசேட விமானம்.
இலங்கைக்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விசேட விமானம், இன்று வெள்ளிக்கிழமை இரவு மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஈரான் நோக்கிப் புறப்பட்டது.
உயிரிழந்த மாலுமிகளின் சடலங்களைத் தாங்கிய ஏர்பஸ் ரக விமானம், இன்று இரவு 9:29 மணியளவில் மத்தளையிலிருந்து ஈரானின் தெஹ்ரான் நோக்கிப் பயணமானது என்று விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே நேரத்தில் 84 சவப்பெட்டிகளை ஏற்றிச் செல்ல வேண்டியிருந்ததால், விமானத்தில் விசேட இடவசதிகள் செய்யப்பட்டிருந்தன. விமானத்தின் சரக்குக் கிடங்கில் அனைத்து சவப்பெட்டிகளையும் வைப்பதற்குப் போதுமான இடவசதி இல்லாத காரணத்தால், சில சவப்பெட்டிகள் பயணிகளின் இருக்கை அறையிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன என்று தெரிவிக்கப்படுகின்றது.
காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த மாலுமிகளின் சடலங்கள், நீதிமன்ற அனுமதியின் பின்னர் இன்று காலிப் பகுதியிலிருந்து பலத்த இராணுவப் பாதுகாப்புக்கு மத்தியில் மத்தள விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டன.
கடந்த மார்ச் 4 ஆம் திகதி சர்வதேசக் கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தில் இவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் பிராந்திய ரீதியாக பெரும் இராஜதந்திரப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
