தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ‘மின்சார மாபியா’வுக்கு தீனி போடுகின்றது அரசு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் தாக்கு.

தற்போதைய அரசு முன்னெடுக்கும் தரமற்ற நிலக்கரி ஊழலானது, நாட்டில் நிலவும் எரிபொருள் மின்நிலைய மாபியாவை மேலும் வலுப்படுத்துமே ஒழிய வேறொன்றுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின் உற்பத்தியில்
பாரிய வீழ்ச்சி

“அரசு நாட்டுக்குத் தரமற்ற நிலக்கரியையே இறக்குமதி செய்கின்றது என்பதை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பம் முதலே கூறி வருகின்றது. நுரைச்சோலை மின்நிலையத்தின் மூன்று இயந்திரங்கள் ஊடாக நேற்று 810 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 680 மெகாவோட் மாத்திரமே உற்பத்தியாகியுள்ளது. இந்த 130 மெகாவோட் தட்டுப்பாட்டுக்குத் தரமற்ற நிலக்கரி பயன்பாடே பிரதான காரணமாகும்.

தரமற்ற நிலக்கரியால் போதுமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படாத போது, அதனை ஈடுகட்ட எரிபொருள் மின்நிலையங்களிலிருந்து அதிக விலைக்கு மின்சாரம் பெறப்படுகின்றது. இந்த நட்டத்தை இறுதியில் மின்சார நுகர்வோரான பொதுமக்களே தாங்க வேண்டியுள்ளது.

ஊழல் நிறுவனங்களுக்கே
மீண்டும் ஒப்பந்தம்

இந்தத் தரமற்ற நிலக்கரியால் தற்போது மின்சாரத் துறையில் ‘அவசர கொள்முதல்’ நிலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. வியப்பூட்டும் விடயம் என்னவென்றால், இதுவரை தரமற்ற நிலக்கரியை விநியோகித்த அதே நிறுவனத்துக்கே மீண்டும் புதிய ஒப்பந்தங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது மிகவும் ஆபத்தான மற்றும் மோசடியான செயலாகும்.

சுற்றுச்சூழல் மற்றும்
சுகாதார பாதிப்புகள்

வலுச்சக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பாகும். ஆனால், தற்போது ‘வலுச்சக்தி அபாயமே’ காணப்படுகின்றது. தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதால் மின் உற்பத்தி உபகரணங்கள் சேதமடைவதுடன், சாம்பல் சதவீதம் அதிகரிப்பதால் மக்களின் உடல் நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அரச அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் நுரைச்சோலைக்கு விஜயம் செய்தபோது, மின் உற்பத்தி குறைவாக இருப்பதை நேரடியாகக் கண்டும், நிலக்கரியில் எந்தப் பிரச்சினையும் இல்லை என நாட்டுக்குப் பொய் உரைப்பது கண்டிக்கத்தக்கது.

மக்களுக்கு
இழைக்கப்படும்
துரோகம்

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் சர்வதேச ரீதியில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள தருணத்தில், இவ்வாறான ஊழல்கள் நாட்டுக்கு இழைக்கப்படும் குற்றமாகும். முறைமை மாற்றம் பற்றிப் பேசிக்கொண்டு ஊழல், மோசடிகளையே அரசு முன்னெடுத்து வருகின்றது.

அதிக மின்சாரக் கட்டணத்தை அறவிட்டு, இந்த ஊழலின் சுமையை மக்கள் மீது சுமத்துவதற்காக மக்கள் இந்த அரசுக்கு ஆணையை வழங்கவில்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.