இனி QR இன்றி எரிபொருள் இல்லை! – பொலிஸ் பாதுகாப்புடன் விநியோகிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிரடி முடிவு.

இனிவரும் காலங்களில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன், கியூ.ஆர். குறியீட்டு முறையின் கீழ் மாத்திரமே எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண நேற்று பிற்பகல் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“எமது எரிபொருள் முன்பதிவுகள் வழமை போன்று கிடைத்து வருகின்றன. எனவே, அடுத்த மாத இறுதி வரை விநியோகத்தில் எவ்விதச் சிக்கலும் இருக்காது. இன்று (நேற்று) காலை கியூ.ஆர். முறைமை அமுலுக்கு வந்தபோது ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது முழுமையாகச் சரி செய்யப்பட்டுள்ளன.

வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நுகர்வோர் தேவையற்ற முறையில் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கியூ.ஆர். முறைமைக்குப் புறம்பாக எவருக்கும் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது. இதனை உறுதிப்படுத்தப் பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. அத்துடன், தேவையற்ற முறையில் வரிசைகளில் நிற்பவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது.

எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கப்படும் அளவுக்கும், கியூ.ஆர். ஊடாக விநியோகிக்கப்படும் அளவுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும்.

பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபை ஊடாகத் தொடர்ந்து எரிபொருள் வழங்கப்படும். அவர்களின் பயணத் தூரத்துக்கு ஏற்ப கியூ.ஆர். ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்யப்படும்.

இதேவேளை, மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகமும் முறையாக முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.