2022 இருண்ட காலத்திலிருந்து என்.பி.பி. அரசு பாடம் கற்றதா? – பத்து அதிரடி வினாக்களால் சபையை அதிரவைத்த சஜித்.

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் நாட்டுக்கு ஏற்படப்போகும் விபரீதங்களைச் சுட்டிக்காட்டி, நாட்டின் வலுசக்தி பாதுகாப்பு தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் 10 முக்கிய கேள்விகளை முன்வைத்தார்.

நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் இந்தக் கேள்விகளை எழுப்பிய அவர், 2022ஆம் ஆண்டு சந்தித்த இருண்ட காலத்திலிருந்து அரசு பாடம் கற்றுக்கொண்டதா என்று சாடினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய முக்கிய வினாக்கள் வருமாறு:-

உண்மையான கையிருப்பு எவ்வளவு?

நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு எத்தனை நாள்களுக்குப் போதுமானது? 7 நாள்களுக்கு முன் “இரண்டு மாதங்களுக்கு எண்ணெய் உண்டு” என்று கூறிவிட்டு, இப்போது விலையை உயர்த்தியது ஏன்? உண்மையை வெளிப்படுத்துங்கள்.

விலையேற்றத் தாக்கம்

உலக சந்தையில் எண்ணெய் விலை 30 சதவீதம் அதிகரித்தால், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தில் ஏற்படும் பாதிப்புகளை அமைச்சு கணக்கிட்டுள்ளதா?

வரி நீக்கம்

தற்போதைய நெருக்கடியைக் கருத்திற்கொண்டு எரிபொருள் மீதான வட் உள்ளிட்ட வரிகளை உடனடியாக நீக்கி, இறக்குமதி விலையிலேயே மக்களுக்கு வழங்க அரசு தயாரா?

அவசரகாலத் திட்டம்

சர்வதேச கடல் வழித்தடங்கள் முடக்கப்பட்டால், எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றிப் பேண அரசாங்கத்திடம் உள்ள மாற்றுத் திட்டம் என்ன?

கியூ.ஆர். ஒதுக்கீடு
விஞ்ஞானபூர்வமானதா?

மார்ச் 15 முதல் மீண்டும் அமுலுக்கு வந்துள்ள கியூ.ஆர். ஒதுக்கீடு மக்களின் அன்றாடத் தேவைக்குப் போதுமானதல்ல என்பதை அமைச்சு ஏற்றுக்கொள்கினறதா?

அத்தியாவசிய முன்னுரிமை

மின் உற்பத்தி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு எரிபொருளைப் பகிர்ந்தளிக்க வகுக்கப்பட்டுள்ள தேசிய பொறிமுறை யாது?

சர்வதேச பேச்சுவார்த்தை

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெறவும், சர்வதேச வலுச்சக்தி நிறுவனத்துடன் பேச்சு நடத்தவும் அரசு ஏன் இன்னும் ஆர்வம் காட்டவில்லை?

கேள்விகளை எழுப்பியதோடு நில்லாது, நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்றும் சஜித் பிரேமதாஸ எச்சரித்தார்.

அனைத்து அமைச்சுக்களும் ஒருங்கிணைந்துச் செயற்பட்டு, இந்த மனிதாபிமான நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அரசிடம் அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.