மின் விநியோகத்துக்கு பாதிப்பு எதுவுமில்லை! – நிலக்கரி கப்பல்கள் இலங்கையை நோக்கி வருகின்றன என்றும் பிரதி அமைச்சர் உறுதி.

எதிர்பார்க்கப்படும் வறட்சி அல்லது நிலக்கரி இறக்குமதி தாமதங்கள் காரணமாக, நாட்டின் மின்சார விநியோகத்துக்கு இதுவரை எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தித் திறன் குறையக்கூடும் என நிலவும் அச்சங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

நாடு கடும் வறட்சியை எதிர்கொள்ளவிருப்பதாகவும், இது நீர்மின் உற்பத்தியைப் பெருமளவு பாதிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணநாயக்க விடுத்திருந்த எச்சரிக்கை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர்,

“எரிசக்தி ஆதாரங்களைத் திறமையாக விநியோகிப்பதற்கான அனைத்து உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் தற்போது இலங்கையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில கப்பல்கள் தாமதங்களை அறிவித்துள்ள போதிலும், அது மின் விநியோகத்தைப் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தவில்லை.

எதிர்பார்க்கப்படும் மழைப் பற்றாக்குறை அல்லது இறக்குமதித் தாமதங்களால் மின் தட்டுப்பாடு ஏற்படும் என இதுவரை கண்டறியப்படவில்லை.

எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.” – என்றார்.

மின்வெட்டு குறித்த செய்திகள் பரவி வரும் சூழலில், பிரதி அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.