ஈஸ்டர் தாக்குதலுக்கும் சுரேஷ் சலேவுக்கும் தொடர்பில்லை எலிகள் நிறைந்த சிறையில் தேசிய வீரரை அடைப்பதா? – இப்படி சரத் வீரசேகர கடும் ஆவேசம்.

முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் மேலும் விளக்குகையில்,

“இதுவரை இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஆறு ஜனாதிபதி ஆணைக்குழுக்களோ அல்லது அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்போ சுரேஷ் சலேவுக்கு எதிராக எவ்வித ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

வெளிநாடுகளில் அரசியல் தஞ்சக் கோரிக்கை பெறுவதற்காகச் சில தனிநபர்கள் திட்டமிட்டுப் பரப்பிய பொய்க் குற்றச்சாட்டுகளையே தற்போதைய அரசு ஆதாரமாகக் கொண்டுள்ளது.

யுத்த காலத்தில் நாட்டுக்காகப் பங்காற்றிய ஒரு சிரேஷ்ட அதிகாரியை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு வேண்டுமென்றே பழிவாங்குகின்றது.

தமிழ் புலம்பெயர் அமைப்புகளைத் திருப்திப்படுத்துவதற்காகவே, தேசத்துக்காக உழைத்த ஓர் அதிகாரியை ‘எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் நிறைந்த சிறையில்’ அடைத்து இந்த அரசு பழிவாங்குகின்றது.” – என்றார்.

உண்மையான குற்றவாளிகளையும் திருடர்களையும் பிடிக்க முடியாத இந்த அரசு, சிறு காரணங்களுக்காக முன்னாள் அமைச்சர்களைச் சிறையிலடைத்து மக்கள் மத்தியில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது என்றும் சரத் வீரசேகர இதன்போது கடுமையாகச் சாடினார்.

Leave A Reply

Your email address will not be published.