பிறை தென்படவில்லை; சனி நோன்புப் பெருநாள் – கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு.

இலங்கையின் எப்பாகத்திலும் ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்படாமையினால், புனித ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் நாளைமறுதினம் சனிக்கிழமை கொண்டாடப்படும் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்டின் ஷவ்வால் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று வியாழக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இதன்போது இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரமழான் மாதத்தின் 29 ஆம் நாளான இன்று பிறை பார்க்கும் நடவடிக்கைகள் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டின் ஒரு சில பகுதிகளில் பிறை தென்பட்டதாகத் தகவல்கள் கிடைத்த போதிலும், அத்தகவல்களை உறுதிப்படுத்த முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து நிலவிய நீண்ட ஆலோசனைகளின் பின்னர், ரமழான் மாதத்தை 30 நாள்களாகப் பூர்த்தி செய்து சனிக்கிழமை பெருநாளைக் கொண்டாடப் பிறைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்தது.

இந்தத் தீர்மானத்தை எடுக்கும் மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உறுப்பினர்கள், பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், இலங்கை வக்பு சபை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அதன் பிறைக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள், மேமன், ஹனபி பள்ளிவாசல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்படி, நாளை வெள்ளிக்கிழமை ரமழான் நோன்பின் இறுதி நாளாகக் கருதப்பட்டு, சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் பெருநாள் தொழுகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.