3,000 ரூபாய் முதலீடு.. 15 கோடி வருமானம்.. இப்போது ஆக்ஸ்போர்டு அழைப்பு! இந்திய விவசாயியின் உலகளாவிய அங்கீகாரம்

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் அமராவதி மாவட்டத்திலுள்ள மசலா அஞ்சன்கான் பாரி கிராமத்தை சேர்ந்தவர் 57 வயதான ரவீந்திர மாணிக்ராவ் மெட்கர் என்ற விவசாயி.

அவர் 1984-ஆம் ஆண்டில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே, தனது வீட்டின் மொட்டைமாடியில் கோழிப்பண்ணை தொழில் தொடங்கினார். வனத்துறையில் பணியாற்றிய தனது தந்தையிடமிருந்து பெற்ற 3,000 ரூபாயை கொண்டு ஆரம்பித்த அவரது எளிய கோழிப்பண்ணையில் வெறும் 100 கோழிகள் மட்டுமே இருந்தன.

வணிகவியலில் முதுகலை பட்டப்படிப்பை (M.Com) முடித்த பிறகு, ரவீந்திர மெட்கரின் பயணம் ஒரு புதிய திருப்புமுனையை எட்டியது. அமராவதி மாவட்டத்திலுள்ள சாந்தூர்பஜார் பகுதியில் இருந்த தனது தாயாரின் நான்கு ஏக்கர் நிலம் அவருக்கு கிடைத்தது. அந்த நிலத்தை விற்ற மெட்கரின் குடும்பத்தினர், அதே மாவட்டத்திலுள்ள பட்னேரா பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கினர். அவரது கோழிப்பண்ணை வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அது பெரும் உதவியாக இருந்தது.

பின்னர் ஒரு வங்கியிலிருந்து 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று, 4,000 கோழிகளுடன் ஒரு பண்ணையை தொடங்கினார். சில ஆண்டுகளில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த அவரது பண்ணையில் கோழிகளின் எண்ணிக்கை 20,000-ஆக உயர்ந்தது. இதனிடையே மெட்கரின் வளர்ச்சி பயணத்தை தடுத்த பறவைக் காய்ச்சல், அவரது தொழிலை முற்றிலுமாக முடக்கிப்போட்டது.

2008-ல் மீண்டும் வங்கிக்கடன் பெற்று 20,000 கோழிகளுடன் புது வேகத்தில் களமிறங்கினார். ஒவ்வொரு ஆண்டும் 10,000 கோழிகளை அதிகப்படுத்தினார். இன்று அவரிடம் 1.8 லட்சம் கோழிகள் உள்ளன. 50 ஏக்கர் பண்ணை, ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் வருமானம் என ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு வேளாண்மை கல்லூரிகள் அவரை அழைத்து கவுரவித்துள்ளன. இப்போது அவர் விவசாய மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவரது சாதனை இன்று கடல் கடந்து இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வரை சென்றுள்ளது. அங்கு உரையாற்ற அவருக்கு கிடைத்துள்ள அழைப்பு, உழைப்பால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஒரு உலகளாவிய சான்றாகும்.

Leave A Reply

Your email address will not be published.