ஜோன்ஸ்டன், இரு மகன்கள் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் மேலும் நீடிப்பு.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு மகன்கள் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

வத்தளை மேலதிக நீதிவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி வாகனம் ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன், அவரது மூத்த மகன் ஜொஹான் பெர்னாண்டோ, இளைய மகன் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் உள்ளிட்ட ஐவர் இவ்வாறு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அரச சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான இந்த வழக்கு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.