மஸ்கெலியா நகரில் மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா கலந்த ‘மதனமோதக’ மாத்திரை விற்பனை – ஆயுர்வேத கடை உரிமையாளர் கைது.
மஸ்கெலியா நகரில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து, சட்டவிரோத கஞ்சா கலந்த ‘மதனமோதக’ மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேகநபர் மஸ்கெலியா நகரில் ஆயுர்வேத மூலிகை மருந்துக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
விசாரணைகளின்படி, கடைக்கு வரும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு பொதி 250 ரூபா என்ற விலையில் இந்த நச்சு மாத்திரைகளை அவர் இரகசியமாக விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், விற்பனைக்காகக் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 648 சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதக பொதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து 62 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக மஸ்கெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
