சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வளமான சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்! – ரமழான் திருநாள் வாழ்த்துச் செய்தியில் வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.

வளமானதும் சமாதானமானதுமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப ரமழான் திருநாள் புதிய நம்பிக்கையை அளிக்கட்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ஒரு மாத காலமாகப் புனித நோன்பு நோற்று, இறை பக்தி மற்றும் ஆன்மீக ஒழுக்கத்துடன் அதனை நிறைவு செய்து, ரமழான் பெருநாளைக் கொண்டாடும் வடக்கு மாகாணம் உள்ளிட்ட இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ரமழான் பண்டிகையானது வெறுமனே உணவையும் தாகத்தையும் தவிர்ப்பது மட்டுமல்லாமல்; பொறுமை, தியாகம், சகோதரத்துவம் மற்றும் சக மனிதர்களின் துன்பங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவும் உன்னத மனிதாபிமானப் பண்புகளை வலியுறுத்துகின்றது. தன்னிடம் உள்ளவற்றில் ஒரு பகுதியை இல்லாதவர்களுக்கு வழங்கி சமூக நீதியை நிலைநாட்டும் இந்த உயரிய விழுமியங்கள் இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமானவையாகும்.

எமது வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, இஸ்லாமிய மக்கள் ஏனைய சமூகங்களுடன் நீண்டகாலமாகச் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த ரமழான் பெருநாள் எமக்குக் கற்றுத்தரும் பரஸ்பர அன்பு மற்றும் சகவாழ்வு பற்றிய பாடமானது, இன மத பேதங்களைக் கடந்து நாமனைவரும் ஒரே சமூகமாக இணைந்து செயற்பட எம்மை மேலும் ஊக்குவிக்கின்றது.

உலகளாவிய ரீதியில் பல நெருக்கடிகளையும், யுத்த மோதல்களையும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அமைதியும் விடிவும் கிடைக்க வேண்டும் என இந்த நன்நாளில் நாம் கூட்டாகப் பிரார்த்திப்போம். உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் ஒருவரை ஒருவர் தனிமைப்பட விடாது, பரஸ்பரம் உதவி செய்து சகோதரத்துவத்துடன் செயற்படுவது சமூக ஸ்திரத்தன்மைக்கு ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.

சவால்களைத் தாண்டி, அனைவரும் ஒன்றிணைந்து வளமானதும் சமாதானமானதுமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப இந்த ரமழான் திருநாள் உங்கள் அனைவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கட்டும் எனப் பிரார்த்தித்து, எனது இனிய ஈதுல் பித்ர் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.