நீதி அமைச்சரின் அநாகரிகச் சைகை: நாடாளுமன்றத்தில் வெடித்தது மோதல்! – பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அஜித் பி. பெரேரா வலியுறுத்தல்.

நீதி அமைச்சர் தனக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் அநாகரிகமான சைகை செய்தார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா, சபாநாயகரிடம் நேற்று முறைப்பாடு செய்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் கூச்சலிட்டதால் சபையில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிக்கொண்டிருந்த அஜித் பி. பெரேரா, “இந்தச் சபையில் ஊழல்வாதிகளான அமைச்சர்கள் இருப்பதைப் போலவே, வேலை தெரியாத (செயற்திறனற்ற) அமைச்சர்களும் இருக்கின்றார்கள்” என்று குறிப்பிட்ட போதே இந்தச் சர்ச்சை உருவானது.

இதன்போது குறுக்கிட்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அநாகரிகமான முறையில் சைகை காட்டியதாகக் குற்றம் சாட்டிய அஜித் பி. பெரேரா, “அவர் செய்த சைகையை நான் இங்கே செய்து காட்ட விரும்பவில்லை. ஏனெனில் அது எனக்குப் பொருத்தமானதல்ல. ஆனால், அவர் செய்த அந்தச் செயலை இங்கே அமர்ந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் பார்த்தார்கள். இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

சபையில் ஏற்பட்ட குழப்பத்தைத் தணிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, “ஒலிவாங்கி வழங்கப்படாத நிலையில் பேசப்படும் விடயங்கள் ஹன்சாட்டில் பதியப்படாது. எனவே, உறுப்பினர்கள் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நீண்ட நேரம் வாக்குவாதங்கள் நீடித்தன.

Leave A Reply

Your email address will not be published.