அநுர – மோடி தொலைபேசிப் பேச்சு வெற்றி இலங்கையின் கோரிக்கையை ஏற்று எரிபொருளை அனுப்பியது இந்தியா – இன்று கொழும்பை வந்தடைகின்றது கப்பல்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜநாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் தொலைபேசி ஊடாக இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, 38 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் தகவல்படி, கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடினார். அதற்கு முன்னதாக, கடந்த திங்கட்கிழமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடியிருந்தார்.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மார்ச் மாதத்துக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மத்திய கிழக்கு மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களுடன் ஏற்கனவே ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. எனினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் கப்பல் பற்றாக்குறை காரணமாக, ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களால் எரிபொருளை வழங்க முடியாமல் போனது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், எரிபொருள் விநியோகத்தைப் சீராகப் பேணுவதற்காக இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அவசர எரிபொருள் விநியோகத்தை வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, இந்தியா தற்போது 20 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் மற்றும் 18 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோல் உள்ளடங்கலாக மொத்தம் 38 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், இலங்கையின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்திய அரசு லங்கா ஐ.ஓ.சி. ஊடாக இந்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.