கட்டுநாயக்கவில் சுங்க அதிகாரிகளின் வேட்டை: கைவிடப்பட்ட 13 பொதிகளில் இருந்து 28 மில்லியன் ரூபா சிகரெட்டுகள் மீட்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத நிலையில் கைவிடப்பட்டிருந்த 13 பயணப் பொதிகளில் இருந்து சுமார் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 928 கார்டன் சிகரெட்டுகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சுங்க அதிகாரிகளின் கடுமையான சோதனை நடவடிக்கைகளுக்கு அஞ்சி, அவற்றை வெளியே கொண்டு செல்ல முடியாத நிலையில் கடத்தல்காரர்கள் இந்தப் பயணப் பொதிகளை விமான நிலையத்திலேயே கைவிட்டுச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒரு மாத காலமாகச் சுங்கப் பிரிவினரின் பொறுப்பில் இருந்த இந்தப் பொதிகள் குறித்து எவரும் உரிமை கோரவில்லை.

இதனையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை குறித்த 13 பயணப் பொதிகளும் சுங்க அதிகாரிகளால் திறந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, அவற்றுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய அளவிலான சிகரெட் தொகையை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

கைப்பற்றப்பட்ட சிகரெட் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளைச் சுங்கத் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.