கொடிகாமத்தில் மணல் மாபியாவின் வெறியாட்டம் உழவு இயந்திரத்தால் மோதி பொலிஸ் அதிகாரி கொலை! – மற்றொருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீது உழவு இயந்திரத்தை மோதி விட்டு தப்பிச் சென்ற சம்பவத்தில், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம், கெற்பேலி வீரபத்திரர் கோயிலடிப் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 8:25 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றது என்று கொடிகாமம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
சோதனைக்காக விரைந்த பொலிஸாரைக் கண்டதும், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தின் சாரதி தப்பிச் செல்வதற்காக அதன் வேகத்தை அதிகரித்துள்ளார். இதன்போது வீதியில் நின்ற பொலிஸார் இருவர் மீதும் உழவு இயந்திரத்தை மோதித் தள்ளிவிட்டுச் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.

இந்தக் கொடூரமான மோதலில், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 50 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஹெட்டியாராட்சி அல்பேட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றைய உத்தியோகத்தர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். உயிரிழந்த அதிகாரியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய உழவு இயந்திரம் கிளாலி பகுதியிலுள்ள பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் இன்று பிற்பகல் கைப்பற்றப்பட்டது. தப்பியோடிய சாரதி இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவரைத் தேடிக் கைது செய்யப் பொலிஸார் விசேட குழுக்களை அமைத்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
