லிந்துலை – லெந்தோமஸ் தோட்டத்தில் இன்று குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் சாவு! – 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
லிந்துலை, லெந்தோமஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் ஆண் தொழிலாளர் குழுவினர் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது குளவிகள் கலைந்துவந்து கொட்டியுள்ளன.
இந்தச் சம்பவத்தில் லிந்துலை லெந்தோமஸ் பகுதியைச் சேர்ந்த அப்பாவு சுப்பிரமணியம் (வயது 71) என்பவரே குளவிக் கொட்டுக்கு இலக்காகிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குளவிக் கொட்டுக்கு இலக்கான மற்றைய 4 தொழிலாளர்களும் காயமடைந்த நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேயிலை மலையின் மரமொன்றிலிருந்த குளவிக்கூடு உடைந்ததைத் தொடர்ந்தே, அதிலிருந்த குளவிகள் கலைந்துவந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களைக் கொட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
