கண்டி பொலிஸ் நிலையத்தில் கலாட்டா: புதிய சுதந்திர முன்னணி தலைவர் கைது!

புதிய சுதந்திர முன்னணியின் கட்சியின் தலைவர் அமித் வீரசிங்க, கண்டி பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவரைத் தாக்கியமை தொடர்பான முறைப்பாடு குறித்து விசாரணை நடத்துவதற்காக, கண்டி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு அமித் வீரசிங்க அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது, பொலிஸ் நிலையத்துக்குள் அவர் மிகவும் அமைதியற்ற முறையிலும், கலாட்டாவிலும் ஈடுபட்டார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமித் வீரசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள பெண், அவரது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பெண்ணைத் தாக்கியமை தொடர்பாகவே ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மத்திய மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுதத் மாசிங்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள அமித் வீரசிங்க மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.