நாவற்குழியில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை: பௌத்த பிக்குக்கு ஏப்ரல் 2 வரை விளக்கமறியல்.

யாழ். நாவற்குழி விகாரையில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட பௌத்த பிக்குவை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், நேற்று சனிக்கிழமை வீட்டுப் பாவனைக்காக விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். இதன்போது, அங்கு நின்ற பௌத்த பிக்கு ஒருவர் அச்சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை புரியும் நோக்கில் அநாகரிகமாக நடந்துகொண்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் தரப்பால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபரான பௌத்த பிக்குவைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பௌத்த பிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதன்போது சந்தேகநபர் சார்பில் பெண் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகியிருந்தார். விடயங்களை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரான பிக்குவை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.